ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 6:30 PM IST

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் அடிக்கடி விசிட் அடித்து வருகிறார்கள். பிரதமரை பொறுத்தவரை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் வருகிறார்.

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார். காலை 11.15 மணியளவில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, பிற்பகல் 3:30 மணியளவில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் செல்லும் பிரதமர், வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் சாலை, ரயில், எரிவாயுக் குழாய், வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் போன்ற துறைகளில் ரூ.12,600 கோடிக்கும் மேற்பட்ட  வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 350 கோடி ரூபாய் செலவில், 350 படுக்கைகள் கொண்ட 'அவசர சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை  மருத்துவமனை பிரிவு' மற்றும் பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ராஜஸ்தான் முழுவதும் உருவாக்கப்படும் ஏழு தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். ஜோத்பூர் விமான நிலையத்தில் ரூ.480 கோடி செலவில் கட்டப்படவுள்ள அதிநவீன புதிய முனையக் கட்டிடத்தை மேம்படுத்தவும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தையும், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 'மத்திய கருவியியல் ஆய்வகம்', பணியாளர் குடியிருப்புகள் மற்றும் 'யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டிடம்' ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலை -125 ஏ இல் ஜோத்பூர் ரிங் சாலையின் கார்வார் முதல் டாங்கியாவாஸ் பிரிவு வரை நான்கு வழிச்சாலை; ஏழு புறவழிச்சாலைகள் /  ஜலோர் (என்.எச்-325) வழியாக பலோத்ராவின் முக்கிய நகரப் பகுதிகளை சந்தேராவ் பிரிவு வரை  மறுசீரமைப்பு செய்தல்; தேசிய நெடுஞ்சாலை 25 இன் பச்பத்ரா-பாகுண்டி பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை திட்டங்கள் சுமார் ரூ.1475 கோடி செலவில்  உருவாக்கப்படவுள்ளன.

ராஜஸ்தான் ஜெய்சால்மரை டெல்லியுடன் இணைக்கும் புதிய ரயில் - ருனிச்சா  விரைவு ரயில் மற்றும் மார்வார்  சந்திப்பு- காம்ப்ளி  படித்துறையை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

ராணி துர்காவதியின் 500ஆவது பிறந்தநாளை மத்திய அரசு வெகுவிமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச மாநிலம் ‘வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்கு’ பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஜபல்பூரில் ரூ.100 கோடி செலவில்  21 ஏக்கர் பரப்பளவில் 'வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டம்’ அமைக்கப்பட உள்ளது. இதில் ராணி துர்காவதியின் 52 அடி உயர வெண்கல சிலை நிறுவப்படவுள்ளது.

மேலும், மாண்ட்லா, ஜபல்பூர் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் ரூ.2350 கோடி மதிப்புள்ள ஜல் ஜீவன் இயக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. மத்திய பிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4800 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல்  நாட்டி,  நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அம்மாநிலத்தில், ரூ.1850 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

click me!