வாடிகனில் தன்னுடன் இருந்த பெண் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒடிசா முதல்வர்!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 5:25 PM IST

வாடிகன் நகருக்கு தன்னுடன் வந்த பெண் யார் என்பது குறித்து விளக்கம் அளித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாடிகன் நகருக்கு சென்று போப் பிரான்சிஸை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது ஒரு பெண்ணும் அவருடன் இருந்தார். அந்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களி வெளியாகி வைரலானது. இதையடுத்து, அந்த மர்ம பெண் யார் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. ஆனால், முதல்வர் தரப்பில் தொடர்ந்து மவுனம் சாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வாடிகன் நகருக்கு தன்னுடன் வந்த பெண் யார் என்பது குறித்து விளக்கம் அளித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒடிசா மாநில சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் வைத்தே இதற்கான விளக்கத்தை முதல்வர் நவீன் பட்நாயக் அளித்துள்ளார்.

Latest Videos

undefined

“வாடிகனுக்கு என்னுடன் வந்த பெண்ணின் பெயர் ஷ்ரதா. அவர் என்னுடைய பிசியோதெரபிஸ்ட். என் உடல் தகுதியை கவனித்துக்கொள்ள என் சகோதரி மறைந்த கீதா மேத்தா அவரை அனுப்பினார். ஷ்ரதாவுக்கு அரசு குடியிருப்புகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. அவரது பயணக் கட்டணத்தை ஒடிசா அரசு செலுத்தவில்லை. தனிப்பட்ட வகையில் அனைத்தும் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த மகாசபையின் பொன்னான நேரத்தை நாம் பொது நலன் சார்ந்த பிரச்சனைகளில் விவாதம் செய்ய பயன்படுத்த வேண்டும்.” என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு: என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாடிகன் நகருக்கு நவீன் பட்நாயக் சென்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். இதையடுத்து, முதல்வருடன் ஒரு மர்மப் பெண் இருப்பதாகவும், அவர் யார் என்ற கேள்வியை சட்டமன்றத்துக்கு உள்லேயும், வெளியேயும் எதிர்க்கட்சியாக பாஜக எழுப்பி வந்தது.

முன்னதாக, பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயநாராயண மிஸ்ரா இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பினார். ஆனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவரது பேச்சு அவைக்குறிப்பிலும் இடம்பெறவில்லை. அப்பெண் யார் என கேள்வி எழுப்பிய அவர், அப்பெண்ணுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

உலக உணவுத் திட்ட அழைப்பின் பேரில் கடந்த ஆண்டு இத்தாலி சென்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனது இத்தாலி பயணத்தின் மூன்றாவது நாளில் போப்பை சந்தித்தார். அப்போது, அதிகாரப்பூர்வமாக அவரது தனி செயலாளர் விகே பாண்டியனும் அவருடன் சென்றார். நவீன் பட்நாயக், விகே பாண்டியன் ஆகியோர் போப்பிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர், ஒரு பெண்ணும் ஆசீர்வாதம் பெற்றார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சியான பாஜக கேள்வி எழுப்பி வந்தது.

click me!