சட்டமன்றத் தேர்தல்: தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!

By Manikanda Prabu  |  First Published Oct 3, 2023, 9:59 AM IST

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்


மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் அடிக்கடி விசிட் அடித்து வருகிறார்கள். பிரதமரை பொறுத்தவரை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் வருகிறார்.

அந்த வகையில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். காலை 11 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரின் ஜக்தல்பூரில், நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை உட்பட ரூ.26,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணிக்கவுள்ளார்.

Tap to resize

Latest Videos

பிற்பகல் 3 மணியளவில், தெலங்கானாவின் நிஜாமாபாத் செல்லும் பிரதமர், அங்கு மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளில் சுமார் ரூ.8000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்தவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.

தற்சார்பு இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கையாக சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். சுமார் ரூ.23,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் கிரீன்ஃபீல்டு திட்டமாகும். நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை, ஆலையிலும், துணை மற்றும் கீழ்நிலை தொழில்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இது பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய ரயில் பாதை மற்றும் ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். போரிதந்த் – சூரஜ்பூர் ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் மற்றும் அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தரோகி – ராய்ப்பூர் டெமு ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் திட்டங்கள், சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குன்குரி முதல் சத்தீஸ்கர் – ஜார்க்கண்ட் எல்லை பிரிவு வரை’யிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி - நிதியமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த கே. அண்ணாமலை!

என்.டி.பி.சியின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 800 மெகாவாட் அலகை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இது தெலங்கானாவுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். இது, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான மின் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.

மனோகராபாத் மற்றும் சித்திபேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை, தர்மாபாத் – மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் – கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். சித்திபேட் – செகந்திராபாத் – சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

தெலங்கானாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (சி.சி.பி) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆதிலாபாத், பத்ராத்ரி கொத்தகூடம், ஜெயசங்கர் பூபாலபள்ளி, ஜோகுலாம்பா கட்வால், ஹைதராபாத், கம்மம், குமுராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், மகபூப்நகர் (படேபள்ளி), முலுகு, நாகர்கர்னூல், நல்கொண்டா, நாராயண்பேட்டை, நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா, ரங்காரெட்டி (மகேஸ்வரம்), சூர்யபேட், பெத்தபள்ளி, வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சி.சி.பி.க்கள் கட்டப்படும். இந்த சி.சி.பி.க்கள் தெலங்கானா முழுவதும் மாவட்ட அளவிலான தீவிர சிகிச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மாநில மக்களுக்கு பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!