டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி “ பி.எம் விஸ்வகர்மா” என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மத்திய அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெல்லியின் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் பிரதமர் மோடி இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பிரதமர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், பழங்கால பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பல்வேறு பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உள்ளூர் தயாரிப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் செழித்து வளரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
undefined
அந்த வகையில் பிரதம மந்திரி விஸ்வகர்மா என்ற பெயரில் ரூ.13,000 கோடி செலவில் மத்திய அரசு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் அடிப்படையிலான பிரதமர் விஸ்வகர்மா இணையதளத்தை பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் கைவினை கலைஞர்கள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சியை உள்ளடக்கிய திறன் மேம்பாடு, கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை ₹15,000 ஆகியவை வழங்கப்படும். மேலும் பிணையமில்லாத கடன் உதவி ₹1 லட்சம் (முதல் தவணை) மற்றும் ₹2 லட்சம் (இரண்டாம் தவணை) மூலம் வழங்கப்படும்.
இத்திட்டம் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் அவர்கள் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்யும். இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும். பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பதினெட்டு பாரம்பரிய கைவினைப்பொருள் தொழில்கள் உள்ளது. தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தயாரிப்பவர், கொத்தனார், தேங்காய் நெசவாளர், முடி திருத்தும் தொழிலாளர், பூ மாலை கட்டுபவர், தையல் தொழிலாளர், சலவை தொழிலாளர், பொம்மை தயாரிப்பாளர், கூடை, பாய், துடைப்பம் தயாரிக்கும் தொழிலாளர், மீன் பிடி வலை தயாரிப்பாளர் ஆகியோர் நிதி உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது கைவினை கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.