மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில தரவுகள் தெரிவிக்கின்றன
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1,118 பேர் காயமடைந்துள்ளனர், 33 பேர் மாயமாகியுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 96 பேரின் சடலங்கள் இதுவரை உரிமை கோரப்படாமல் பிணவறைகளில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்தாலும், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இந்த சூழலில், மணிப்பூர் வன்முறையின் தாக்கம் குறித்த சில முக்கிய புள்ளிவிவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1,118 பேர் காயமடைந்துள்ளனர். 33 பேர் மாயமாகியுள்ளதாகவும், 96 பேரின் சடலங்கள் இதுவரை உரிமை கோரப்படாமல் பிணவறைகளில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5,172 தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் 4,786 வீடுகள் மற்றும் 386 மதவழிபாட்டு தளங்கள் (254 தேவாலயங்கள் மற்றும் 132 கோவில்கள்) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து இதுவரை 5,668 ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் 1,329 ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 15,050 வெடிபொருட்கள் மற்றும் 400 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் குறைந்தது 360 சட்டவிரோத பதுங்கு குழிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்பால்-சுராசந்த்பூர் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஃபூகாக்சாவ் இகாய் மற்றும் காங்வாய் கிராமங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இந்த தடுப்புகள் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இடையே ஒரு தடுப்பு அரணாக செயல்பட்டு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மைதேயி மற்றும் குகி மக்கள் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையில், இன வன்முறை குறித்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சர்வதேச மைதேயி மன்றம் தொடர்ந்த பொதுநல வழக்கை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயர்வு: இஸ்ரோ தகவல்!
மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமான மைதேயி சமூக மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் உட்பட 40 சதவீத பழங்குடியினர் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.