பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இன்று மட்டும் 7 கூட்டங்கள் நடைபெறவுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்து வந்தார். கடைசி கட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டு கடந்த 30ஆம் தேதி மாலை நேராக கன்னியாகுமரி வந்த அவர், கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் நேற்று மாலை வரை தியானம் மேற்கொண்டார். பின்னர், அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதனிடையே, நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அரசு பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி, இன்று மட்டும் அவரது தலைமையில் சுமார் 7 கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
undefined
முதல் கூட்டத்தில் வடகிழக்கு இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ரெமல் புயலால் ஏற்பட்ட கனமழையால், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமானோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். புயலின் தாக்கம், ஏற்பட்டுள்ள பாதிப்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை விசி வருகிறது. ஹீட்ஸ்ட்ரோக்கல் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, நாட்டின் வெப்பநிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் ஒன்றை இன்று நடத்தவுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் இம்முறை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் என மொத்தம் 7 கூட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
திகார் சிறைக்கு திரும்பும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
குறிப்பாக, புதிய அரசு அமைந்த பிறகு முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அரசு சார்பாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நாட்களில் மோடி 3.0-ன் முதல் 100 நாட்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தயாராவது குறித்து வீட்டுப்பாடம் எழுதி வர அதிகாரிகளை பிரதமர் மோடி பணித்திருந்தார். தனது மூன்றாவது அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் அனைத்து கடுமையான முடிவுகளும் எடுக்கப்படும் என்றும், 2029 தேர்தல் வரை காத்திருக்க போவதில்லை எனவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, முதல் 100 நாட்களில் பிரதமர் மோடி என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் தயார் செய்துள்ள நிலையில், பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அதுபற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த முடிவுகள் அனைத்தும் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கமாக கொண்டு எடுக்கப்படும் என தெரிகிறது. புதிய அமைச்சரவை பதவியேற்று, ஜூலை முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஆகஸ்ட் மாதம் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.