நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான பதவி காலம் இன்றோடு முடிவடைவதையொட்டி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது.
இரண்டு மாநில தேர்தல்- வாக்கு எண்ணிக்கை
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் சிக்கம் மற்றும் அருணாச்சலபிரதேச 2 சட்டசபைகளின் பதவிக்காலமும் (ஜூன் 2-ந் தேதி) இன்றோடு நிறைவு பெறுகிறது. ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் கமிஷன் மாற்றியமைத்தது. அந்த வகையில் இந்த இரணடு மாநிங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது.
undefined
முன்னிலையில் பாஜக
அருணாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தில் ஏற்கனவே பா.ஜ.க. வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதனால், அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் எஞ்சிய 50 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் யார் என்பதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எனவே அருணாச்சல பிரதேசத்தை பாஜக கைப்பற்றும் என அம்மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
சிக்கம் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்.?
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநில சட்டசபையில் மொத்தம் 32 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
2019 சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்கைக் கைப்பற்றிய நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற நிலையில், சரியாக 17 தொகுதிகளைக் கைப்பற்றி சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஆட்சியைப் பிடித்தது. இதனால், தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.