
ஞாயிற்றுக்கிழமை அன்று மன் கி பாத்தின் 119வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமனால் அவதிப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டன என்றும், குழந்தைகளிடையே உடல் பருமன் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். சமையல் எண்ணெயை 10 சதவீதம் குறைவாக வாங்கவும், பின்னர் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதில் பிரதமர் பேசியதாவது : "உடல் ஆரோக்கியமான நாடாக மாற, நாம் உடல் பருமன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஒரு ஆய்வின்படி, இன்று ஒவ்வொரு எட்டு பேரில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டன, ஆனால் இன்னும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சினையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது," என்று பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படியுங்கள்... "இந்திய மொழிகளிடையே பகைமை இருந்ததில்லை" - பிரதமர் மோடி!!
"ஆகையால், ஒவ்வொரு மாதமும் 10% குறைவான எண்ணெயை மட்டுமே பயன்படுத்துவேன் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். சமையலுக்கு எண்ணெய் வாங்கும்போது 10 சதவீதம் குறைவாக வாங்கலாம் என்று முடிவு செய்யலாம். உடல் பருமனை குறைப்பதற்கான ஒரு முக்கியமான படியாக இது இருக்கும். நமது உணவுப் பழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், நமது எதிர்காலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும், நோயற்றதாகவும் மாற்ற முடியும்," என்று மன் கி பாத்தில் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் உடல் பருமனை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் மோடி 10 இந்திய பிரபலங்களை தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவரும் மேலும் 10 பேரை தேர்வு செய்து இந்த உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி தேர்வு செய்துள்ள 10 பேர் பட்டியலில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, அரசியல்வாதிகளான நிரஹுவா ஹிந்துஸ்தானி, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, ராஜ்யசபா எம்பி சுதா மூர்த்தி, நடிகர்கள் மோகன்லால், மாதவன், பாடகி ஷ்ரேயா கோஷல், விளையாட்டு வீராங்கனைகள் மனு பாக்கர், மீராபாய் சானு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதையும் படியுங்கள்... விக்ஸித் பாரத் பயணத்தில் SOUL அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்!!