
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்ககளுடன் நான்காவது அமெரிக்க விமானம் இன்று டெல்லியில் தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் வந்த 12 இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து பனாமா வழியாக இந்தியாவுக்கு திரும்பி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 12 பேரில், நான்கு பேர் பஞ்சாபின் அமிர்தசரஸுக்குச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி முதல் சுற்று நாடுகடத்தல் நடந்தது. அப்போது ஒரு அமெரிக்க இராணுவ விமானம் 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸுக்கு வந்தது. அதில் இந்தியர்கள் கைகால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நாடுகடத்தப்படுபவர்கள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்காவுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியிருந்தார். சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்துவது ஒரு புதிய நிகழ்வு அல்ல என்றும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளின் கீழ் நாடு கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 இந்தியக் குடியேறிகள் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
40 சதவீதம் பேர் தாமாக முன்வந்து நாடு திரும்புவதை மறுத்து வருவதால், ஐ.நா. அமைப்புகள் மாற்று இடங்களைத் தேடிவருகின்றன. பனாமா ஒரு போக்குவரத்து மையமாகச் செயல்படும் அதே வேளையில், செலவுகளை அமெரிக்கா ஈடுகட்டுகிறது. இந்நிலையில், அவர்களை அடைத்து வைப்பது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவதை டிரம்ப் தனது முக்கிய கொள்கையாக அறிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் அமெரிக்க மக்கள்தொகையில் 3.3 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அவர்களில் வெளிநாட்டில் பிறந்தவர்கள் மக்கள்தொகையில் 23 சதவீதம் என்றும் பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பெற்றோர் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகளைக் கண்காணிக்க டிரம்ப் நிர்வாகம் குடியேற்ற முகவர்களை நியமித்துள்ளது. இது அமெரிக்க அதிபரின் நாடுகடத்தல் முயற்சியை விரிவுபடுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு முதல் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த குழந்தைகள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லாமல் அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்துள்ளனர் என்று அமெரிக்க அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அமெரிக்கத் தரவுகள் காட்டுகின்றன.