அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், பிரதமர் மோடி கலந்து கொண்டு கோயிலை திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் கட்டுமான பணிகளில், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுகிறது. எனவே, கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன், கோயில் எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வமும் பலரிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், பிரதமர் மோடி கலந்து கொண்டு கோயிலை திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையினர் தெரிவித்த தகவலின்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 24ஆம் தேதிக்குள் பிரதமர் மோடியால் அயோத்தி ராமர் கோயில் திறந்து வைக்கப்படும் என தெரிகிறது.
ஆனால், கோயில் நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேதி குறித்த ஊகங்கள் தொடர்ந்தாலும், திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதனிடையே ஏசியாநெட்டுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்களின்படி, கோயில் திறப்பு விழா நடைமுறைகள் ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கொடுக்கும் தேதியின் அடிப்படையில், ஜனவரி 14 முதல் 24ஆம் தேதிக்குள் எந்த தேதியில் வேண்டுமானாலும் கோயில் திறக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக இருக்கும் நிருபேந்திர மிஸ்ரா, ஏசியாநெட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ராமர் கோயிலில் ஜனவரி 14, 2024 அன்று பிரார்த்தனை மற்றும் சிலை நிறுவும் விழா தொடங்கும். பிரதமர் நரேந்திர மோடி முடிவின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் ஜனவரி 24க்கு இடைப்பட்ட எந்த நாளிலும், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட கோயிலில் ராமர் சிலையின் இறுதி பிராண-பிரதிஷ்டா (கும்பாபிஷேகம்) நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அனுமதி கொடுக்கும் தேதியில், கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். மறுநாள் முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் பணிக்குழு கூட்டம்!
அதேசமயம், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் வரலாற்றைக் காண்பிக்கும் வகையில் அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்த விளக்கக்காட்சி பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் வழங்கப்பட்டது. டெல்லியில் கடந்த வாரம் பிரதமருடனான உயர்மட்டக் கூட்டத்தில், அயோத்தியில் அமைக்கப்படவுள்ள அந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. இதனை பிரதமர் மோடி செய்தார். உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகளை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையிட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.