‘பீம் ஆப்ஸ்’ மூலம் இளைஞர்கள் தினமும் ரூ.200 சம்பாதிக்கலாம்... ‘டிஜிதன் திட்டத்தை’ ஊக்கப்படுத்த பிரதமர் மோடி அறிவிப்பு!

First Published Apr 14, 2017, 7:19 PM IST
Highlights
PM Modi launching incentive scheme Bhim App


டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள ‘பீம் ஆப்ஸை’(செயலி) நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் ரூ.200 சம்பாதிக்கலாம். ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் டிஜிட்டல் பேமெண்ட் முக்கியமானது என்று  பிரதமர் மோடி தெரிவித்தார்.

டிஜிட்டல் பரிமாற்றம்

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்க புழக்கத்தில் இருந்த ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர்8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமானது பீமாராவ் அம்பேத்கர் பெயரில் உருவான ‘பீம்’ செயலியாகும். இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகமானது.

இன்டர்நெட் தேவையில்லை

இன்டர்நெட் இல்லாமல், டெபிட், கிரெடிட் கார்டு, தகவல்கள் இல்லாமல் கை பெருவிரல் ரேகை மூலம் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ பீம் செயலியால் முடியும். அதற்கு அனைவரும் வங்கிக்கணக்கோடு, ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும். இத்தகை சிறப்பு வாய்ந்த பீம் செயலி யு.பி.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து இயங்கும்.

அறிமுகம்

இந்த பீம் செயலியை அம்பேத்கரின் 126-வது பிறந்தநாளான ேநற்று நாகபுரியில் உள்ள தீக்சாபூமியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.

முன்னதாக தீக்சாபூமிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தியானம் செய்து, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் இருந்தனர்.

போனஸ் திட்டங்கள்

அதன்பின், பி.ஆர் அம்பேத்கர் பெயரில் உருவாக்கப்பட்ட ‘பீம்’ செயலியை மோடி முறைப்படி அறிமுகம் செய்து அதை ஊக்கப்படுத்த இரு போனஸ் திட்டங்களையும் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

ரூ.10 ‘கேஷ்பேக்’

இந்த டிஜிதன் இயக்கமானது நாட்டை ஊழல் இல்லாமல் சுத்தப்படுத்தும் இயக்கமாகும். இந்த டிஜிதன் திட்டம் ஊழலுக்கு எதிராகப் போராடும்.

பீம் செயலியை ஊக்கப்படுத்துவதற்காக இரு போனஸ் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பீம் செயலியை ஒவ்வொரு நபரும், மற்றொருவருக்கு அறிமுகம் செய்தால், அறிமுகம் செய்பவருக்கு  ரூ.10 கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு அறிமுகம் செய்து வைத்தால், ரூ.200 சம்பாதிக்கலாம்.

ஆதரவு

ரூபாய் நோட்டுக்கு தடைக்குபின், டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்கப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள்.  ஏராளமான மக்கள் டிஜிதன் இயக்கத்தில் இணைந்து டிஜிட்டல் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

பீம் செயலி நாடுமுழுவதும் சாதகமான தாக்கத்தை பலரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.மிகக்குறைவான பணத்தை கூட நீங்கள் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யலாம்.

பெருவிரல் ரேகை

ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்பாக 5 பாதுகாப்பாளர்கள் இருக்க வேண்டும். ஏ.டி.எம். பாதுகாப்பு அளிப்பவருக்கே சில நேரங்களில்  பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினைகளும் இருந்தன.

கல்வியறிவு இல்லாதவர்கள்தான் ஒரு காலத்தில் பெருவிரல் ரேகையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்தனர். ஆனால், இப்போது ‘பீம்’ செயலி யில் அதே பெருவிரல் ரேகைதான் உங்களின் வலிமையாக மாறி இருக்கிறது.

டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்காக ரூ.250 கோடியை அரசு செலவிட்டுள்ளது. யாரெல்லாம் இந்த விருதை அரசிடம் இருந்து பெற்றார்களோ அவர்கள்தான் இந்த திட்டத்தின் தூதுவர்கள்.

நாட்டின் எந்த சாமானியரும் ஸ்மார்ட்போன், இன்டர்நெட், டெபிட், கிரெடிட் கார்டு இல்லாமல், ஆதார் எண் அடிப்படையில்  பணப்பரிமாற்றம் செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்....

ஒரு கோடி பரிசு

மத்தியஅரசு அறிமுகம் செய்த லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ் மஹாராஷ்டிரா மாநிலம், லட்டூர் நகரைச் சேர்ந்த ஷாரதா என்ற சிறுமிக்கு ரூ. ஒரு கோடி பரிசு கிடைத்தது. அதை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், 2-ம் பரிசான ரூ.50 லட்சம், 3-ம் பரிசான 25 லட்சத்தையும் பரிசு பெற்றவர்களுக்கு பிரதமர் வழங்கினார். டிஜிதன் வியாபார் யோஜனா திட்டத்தில் வர்த்தகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

click me!