
75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் இந்த சாதனைக்காக குடிமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியாவில் பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதற்குப் பின் மார்ச் மாதம் வாக்கில் இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாகவே மே மாதம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களுக்கு தயக்கம் இருந்தது. அதன்மீது தவறான தகவல்கள் பரபரப்பட்டன. இதனால் மக்கள் அதனைக் கண்டு காத தூரம் ஓடினர். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும் தீவிர விழிப்புணர்வாலும் பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர்.
நாடு முழுவதும் 100% என்ற தடுப்பூசி தன்னிறைவை எட்டுவதற்கு இன்னும் ஒரு ஆண்டிற்கு மேல் கூட ஆகலாம். இருப்பினும் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவித்து வருகின்றன. அதேபோல தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கலர் கலர் பரிசுகள், இலவசம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை தடுப்பூசி மையங்களுக்கு வரவழைத்தனர். இதன் பயனாக இந்திய மக்கள்தொகையில் 50.8% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். அதாவது 70.1 கோடி மக்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். 165 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளனர். இவர்களில் 75% பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதுதொடர்பாக சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார். அதில், அனைவரின் ஆதரவு மற்றும் முயற்சி என்ற மந்திரத்தால் இது சாத்தியமாகியிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வலுப்பெற்று வருகிறோம். நாம் அனைத்து விதிகளையும் பின்பற்றி, விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ரீட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, வயது வந்த 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த முக்கியமான சாதனைக்காக நமது குடிமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய நாட்டு மக்கள் ஒவ்வொருவரை நினைத்தும் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.