
மும்பையில் சென்ற வாரம் எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் திடீரென கூட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலுக்கு, பூ விழுந்துவிட்டது என்ற பூ வியாபாரிகளின் அழுகுரலை பாலம் விழுந்து விட்டது என்று மக்கள் புரிந்து கொண்டதே காரணம் என இந்த விபத்தில் தப்பிய ஒரு பெண் கூறியுள்ளார்.
மும்பை, எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி, லேசான காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் சொன்ன தகவல், விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுகிய அந்தப் பாலத்திலும் வெளியிலும் பூக்கள் விற்பவர்கள் அதிகம் பேர் இருந்தார்களாம். அப்போது, அந்தப் பாலத்தின் வழியே பலரும் வந்தபோது, பூ வியாபாரி ஒருவர் தனது கூடையில் இருந்த பூக்கள் எல்லாம் விழுந்து விட்டன என்று சொல்லி அழுதுள்ளார். ஹிந்தியில் 'ஃபூல் கிர் கயா' என்று கூறி அழுது அரற்றியுள்ளார். இந்த அழுகுரலைக் கேட்டவர்கள் அதனை 'ஃபுல் கிர் கயா' (பாலம் இடிந்து விழுந்துவிட்டது) என்பதாகப் புரிந்து கொண்டனராம். ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருந்ததால், இதனை அவர்களாக அனுமானித்தனர் என்றும், அதனால், பாலம் மேலும் இடிந்து விழும் முன் உடனடியாக அதில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும் என்றும் அவர்கள் முண்டியடித்தார்களாம்.
இவ்வாறு மக்கள் அங்கும் இங்கும் சிதறி, மேலிருந்து குதித்து, கம்பிகளின் வழியே வெளியில் வந்து, தப்பிச் செல்ல முயன்றதில் நெரிசல் ஏற்பட்டது என்றும், அதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் அந்த மூத்த ரயில்வே அதிகாரி, இந்தப் பெண்ணின் கருத்தைக் குறித்து பதிலளித்த போது, உண்மையிலேயே இந்த விஷயம்தான் கூட்ட நெரிசலுக்குக் காரணமா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றுள்ளார்.
இருப்பினும், அந்தப் பெண் கூறியதைப் போல் வேறு எவரேனும் சொல்கிறார்களா என்பதை விசாரணைக் குழுவினர் கவனித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்து உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றவர்களிடமும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவியவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், காயமடைந்து சிகிச்சை பெற்ற இன்னொரு பெண், பாலத்தில் மின் கசிவு ஏற்பட்டிருப்பதாக சிலர் சொன்னதாகவும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்க அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் ஏதோ ஒரு வதந்தி மக்களிடையே பரவியதுதான் காரணம் என்று உறுதி செய்துள்ள அதிகாரிகள், அது இந்தப் பூவும் பாலமுமான வார்த்தைகள்தானா அல்லது வேறு ஏதேனும் புரளியா என்பதை உறுதி செய்ய முயன்று வருகின்றனர்.