
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை போலீசார் களைய செய்து உள்ளாடையுடன் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பண்டல்கண்டில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசின் தூண்டுதலின்பேரிலேயே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியது. சிறிதுநேரத்தில் போராட்டம் வன்முறையக மாறியவுடன் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர்.
பின்னர் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து அவர்களை கட்டாயப்படுத்தி ஆடைகளை அவிழ்த்து உள்ளாடையுடன் நிற்கச் செய்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை அவிழ்க்க செய்து அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் ஆடைகள் அவிழ்க்கப்பட்ட புகைப்படத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த பிரச்னையை மனித உரிமைகள் ஆணையத்திடம் கொண்டு செல்ல உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்தியப் பிரதேச போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது.
டெல்லியில் 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை இதுவரை பிரதமர் சந்திக்கவில்லை. அவர்களின் கோரிக்கைகள் என்ன என்பதற்கு செவிமடுக்க பிரதமருக்கு நேரமில்லை. விவசாயத்தைக் காத்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என உறுதியளித்து பிரதமரானவர் தான் பிரதமர் மோடி.
விவசாயிகளையும் விவசாயத்தையும் வளர்ப்பதாக உறுதியளித்து மத்தியில் ஆட்சியில் அமர்ந்த மோடியோ பாஜகவோ விவசாயிகளை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.