
தொழிலாளர்கள் ஓய்வூதிய நல அமைப்பான இ.பி.எப்.ஓ. உள்ள உறுப்பினர்கள் தங்களின் பி.எப். பணம், ஓய்வூதியம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட செட்டில்மென்ட்களை இனி 10 நாட்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெங்களூருவில், பி.எப். உறுப்பினர்களுக்கான சாசன விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாரேயா நேற்று வௌியிட்டார். அதில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பலன்களைப் பெற 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. 4 கோடி பேர் இருக்கும் பி.எப். உறுப்பினர்களுக்கு விரைந்து சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் சேவையின் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
பி.எப். உறுப்பினர்கள் ஆன்-லைன் மூலம் தங்களின் கோரிக்கைகளுக்கு பலன்பெறும் முறை கடந்த 1-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஆதார், வங்கிக்கணக்கு, பி.எப் கணக்கு இணைக்கப்பட்டு உறுப்பினர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 3 மணிநேரத்துக்குள் பதில் அளிக்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், செட்டில்மென்ட்களை பெறும் காலமும் 20 நாட்களில் இருந்து 10 நாட்கள் முதல் 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என பி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.
பி.எப். உறுப்பினர்களுக்கான புதிய விதிமுறை சாசனம் நேற்று வௌியிடப்பட்டது. இந்த சாசனம் மூலம், வௌிப் படைத்தன்மையும், பொறுப்பையும் பி.எப். அமைப்புக்கு ஏற்படுத்த முடியும். மேலும், உறுப்பினர்களுக்க விரைந்து சேவையாற்றி, அவர்களின் குறைகளையும் தீர்க்கும் முறையையும் மேம்படுத்த முடியும் என பி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.