
ரூபாய் நோட்டு தடைக்கு பின், அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் புதிதாக 91 லட்சம் பேர் வருமானவரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தெரிவித்தார்.
இணையதளம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற இணையதளம் நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. கருப்பு பணத்தை வைத்து இருப்பவர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் விளக்கம் அளிக்க இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
ஆன்-லைன் மூலம் வருமானவரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு இந்த இணையதளத்தில் தங்களின் பான் எண்ணை பதிவு செய்து விளக்கம்அளிக்க வேண்டும்
டிஜிட்டல் பரிமாற்றம்
இந்த இணையதளத்தை தொடங்கி வைத்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், “ கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதிக்கு ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட பின், மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து அரசின் வரி வருவாயும் அதிகரித்து வருகிறது.
91 லட்சம் பேர்
நவம்பர் 8-ந்தேதிக்கு பின் புதிதாக 91 லட்சம் பேர் வருமானவரி வளையத்துக்குள் கொண்டு வரப்ப்பட்டுள்ளனர். இனி வரும் காலத்தில் வரி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின் அரசின் வரிவசூல் அதிகரித்துள்ளது
அரசு தொடங்கியுள்ள இந்த புதிய இணையதளம் நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு உதவும். அதேசமயம், வரி செலுத்தாமல், அதிகமான பணத்தை பதுக்கி, பாதுகாப்பாக யாரும் வைத்து இ ருக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.
22 சதவீதம் உயர்வு
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடைகாலத்துக்கு பின், சந்தேகத்துக்கு உரிய வகையில் வங்கியில் பணம் டெபாசிட் செய்த 17.92 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9.72 லட்சம் பேர் எஸ்.எம்,எஸ். மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் அளித்துள்ளனர். வருமான வரி செலுத்தாமல் தப்பித்த ஒரு லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய ரூ. 16 ஆயிரத்து 398 கோடி கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்துள்ளோம். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வதும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.