தெலங்கானாவில் பாஜகவுடன் பவன் கல்யாண் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களை அம்மாநிலம் சந்தித்துள்ளது. இரண்டிலுமே கேசிஆரின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இந்த முறை கேசிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. எனவே, காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, பாஜக ஆகிய கட்சிகளிடையே அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கணிசமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை ஒழித்துக்கட்ட பாஜகவுக்கு கேசிஆர் தேவைப்படுகிறார். இந்த அரசியல் கணக்குகள் ஒருபுறமிருக்க, எதிர்வரவுள்ள மாநிலத் தேர்தல் மட்டுமல்லாமல் மக்களவைத் தேர்தலிலும் இந்தியா கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
இந்த நிலையில், தெலங்கானாவில் பாஜகவுடன் பவன் கல்யாணின் ஜெனசேனா கட்சி கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் பவன் கல்யாண் டெல்லியில் முக்கிய சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, நேற்று முன் தினம் இரவுதான் பவன் கல்யாண் உள்ளிட்ட அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் திரும்பியுள்ளனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகனுக்கு எதிராக அரசியல் செய்து வரும் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் கைகோர்த்துள்ளார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக வலுவாக குரல் எழுப்பிய பவண் கல்யாண், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார். அதேசமயம், தற்போது தெலங்கானாவில் பாஜகவுன் கைகோர்க்க பவன் கல்யாண் திட்டமிட்டு வருகிறார். அதற்கு, தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு போதுமான செல்வாக்கு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: ரூ. 30,000 வரை சம்பளம்..!
வரவிருக்கும் தெலங்கானா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அடுத்த இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொள்கையளவில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை மாநிலமான ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பவன் கல்யாண் கட்சிக்கு தெலங்கானாவின் GHMC மண்டலம், கம்மம், நல்கொண்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 25 இடங்களில் செல்வாக்கு இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் என்பதும், தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கூட்டணியில் இல்லை இங்கு கவனிக்கத்தக்கது.
தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 55 இடங்கள் குறித்து பாஜக அதன் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் கடந்த வாரம் ஆலோசித்தது. அதன் தொடர்ச்சியாக, 52 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், மூன்று சிட்டிங் மக்களவை எம்.பி.க்களும் அடங்குவர். கூட்டணி இறுதி செய்யப்பட்ட உடன், மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து பாஜக அறிவிக்கும் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.