
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) அமர் சிங் சாஹல் பஞ்சாப், பாட்டியாலாவில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அமர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அமர் சிங் சாஹல் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இடத்தில் 12 பக்க தற்கொலை கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் "அவசரம்.. அவசரம்.. என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அது அவரது கடைசி கோடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக் கடிதம் ஒரு ஆன்லைன் மோசடி வழக்கை விவரிக்கிறது. பணக்கஷ்டத்தையும் குறிப்பிடுகிறது. முன்னாள் ஐஜி அமர் சிங் சாஹல், ஃபரித்கோட்கோட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், இந்த தற்கொலை முயற்சியின் அனைத்து விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாட்டியாலா காவல் கண்காணிப்பாளர் வருண் சர்மா, அமர் சிங் சாஹலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார். துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பிறகு அவரது வீட்டிற்குச் சென்று மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் மேலும் கூறினார். சம்பவ இடத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு 12 பக்க தற்கொலைக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் ஐஜி அமர் சிங் சாஹல் தனது தற்கொலைக் கடிதத்தில் 12 பக்கங்களில் தனக்கு ஏற்பட்ட ஆன்லைன் மோசடியை தெரிவிட்டுள்ளார். ஆன்லைன் மோசடி செய்பவர்களால் 1-2 கோடி ரூபாய் மட்டுமல்ல, 8 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த மோசடிக்குப் பிறகு அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார். ஆன்லைன் மோசடிக்குப் பிறகு சாஹல் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதுவே அவர் இந்த கடுமையான முடிவு எடுக்க வழிவகுத்திருக்கலாம். மோசடி வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அவர் தனது தற்கொலைக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு வேறு வழியில்லை என்பதால், "குட்பை ஐயா" என்று எழுதி தனது தற்கொலைக் கடிதத்தை முடித்துள்ளார்.
முன்னாள் ஐஜி அமர் சிங் சாஹல் தொடர்பான மற்றொரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஃபரித்கோட்டில் 2015 ஆம் ஆண்டு பெஹ்பால் கலான், கோட்கபுரா துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பிப்ரவரி 24, 2023 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் பல முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளன. இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் ஃபரித்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சாஹல் மீதும் விசாரணை நடந்து வருகிறது.
ஆனாலும், சாஹலின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். மருத்துவமனையில் அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம். தற்போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.