
வங்கதேசத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே, அங்கு பயின்று வரும் இந்திய மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் முக்கியத் தலைவரான ஷரீஃப் ஒஸ்மான் ஹாதி (32), கடந்த டிசம்பர் 12 அன்று டாக்காவில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டாக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வன்முறை வெடித்தது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், ஹாதியின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் மொத்தம் 9,000 இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களில் 4,000 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குஹாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "மாணவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அடையாளத்தை மறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு மாணவருக்கு மிகவும் வேதனையான விஷயம்." என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் வெளியே வர முடியாமல் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர். உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குச் சிரமப்படுவதோடு, வன்முறையில் சிக்கிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நிலைமை மேலும் மோசமடைந்தால், மாணவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர சிறப்பு மீட்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.