'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!

Published : Dec 22, 2025, 07:46 PM IST
ISRO Team Seeks Blessings At Tirupati Temple

சுருக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் டிசம்பர் 24-ஆம் தேதி LVM3-M6 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. இது இந்தியாவிலிருந்து ஏவப்படும் மிகவும் கனமான செயற்கைக்கோள் ஆகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), வரும் டிசம்பர் 24-ஆம் தேதி மிக முக்கியமான ப்ளூ பேர்ட் பிளாக்-2 (BlueBird Block-2) செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் வெற்றிக்காக, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று (திங்கட்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

வழக்கம்போல இஸ்ரோவின் முக்கியத் திட்டங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ஆன்மீகப் பயணமாக இது அமைந்தது. இஸ்ரோ அதிகாரிகளுடன் சென்ற நாராயணன், விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட்டின் சிறிய மாதிரியை (Miniature Replica) கையில் ஏந்தி சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

ப்ளூ பேர்ட் பிளாக்-2 திட்டம்

இந்தியாவின் சக்திவாய்ந்த 'பாகுபலி' ராக்கெட் என்று அழைக்கப்படும் LVM3-M6 மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. அமெரிக்காவின் AST SpaceMobile நிறுவனத்திற்குச் சொந்தமான 'ப்ளூ பேர்ட் பிளாக்-2' கம்யூனிகேஷன் செயற்கைக்கோள் இதுவாகும்.

இந்திய மண்ணிலிருந்து ஏவப்படவுள்ள செயற்கைக்கோள்களிலேயே இதுதான் மிகவும் கனமான (Heaviest) செயற்கைக்கோள் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். இது சுமார் 6,100 கிலோ எடை கொண்டது.

சிக்னல் தொழில்நுட்பம்

இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பின், நேரடியாக மொபைல் போன்களுக்கே அதிவேக இணைய வசதியை வழங்கும். தரைவழி கோபுரங்கள் இல்லாமலேயே, மொபைல் போன்களுக்கு நேரடியாக 4G மற்றும் 5G சிக்னல்களை வழங்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இதன் மூலம் இணைய வசதி இல்லாத குக்கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் தடையற்ற தொலைத்தொடர்பு கிடைக்கும்.

இஸ்ரோவின் இந்த ஏவுதல் வரும் டிசம்பர் 24 (புதன்கிழமை) காலை 08:54 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நடைபெற உள்ளது. இது இஸ்ரோவின் முழுமையான வணிக ரீதியிலான (Commercial) ஒரு முக்கியத் திட்டமாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!