
கேரளாவின் புகழ்பெற்ற கோவில் நகரமான குருவாயூரில், காலி பீர் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குருவாயூர் நகராட்சியால் ஏ.கே.ஜி (AKG) நினைவு நுழைவாயில் அருகே ஒரு வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டது. இது பார்ப்பதற்கு பச்சை நிற கண்ணாடியால் ஆன அழகிய மரம் போலத் தெரிந்தாலும், உண்மையில் இது குடித்துவிட்டு வீசப்பட்ட காலி பீர் பாட்டில்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வினோத முயற்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் பஷீர் பூக்கோடு இது குறித்துக் கேள்வி எழுப்பினார். ஜோய் செரியன், ஆன்டோ தாமஸ் உள்ளிட்டோர் அவருடன் இணைந்து, "மது பாட்டில்களைக் கொண்டு ஒரு புனிதமான பண்டிகையைக் கொண்டாடுவது முறையா?" என்று வாதிட்டனர்.
கூம்பு வடிவிலான இந்த மரத்தில், பச்சை நிற பீர் பாட்டில்கள் ஒன்றன் மேல் ஒன்றாகச் சுருள் வடிவில் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளன. உச்சியில் ஒரு சிவப்பு நிற நட்சத்திரமும், பாட்டில்களுக்கு இடையே சிறிய மணிகள் மற்றும் அலங்காரப் பந்துகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இது வைக்கப்பட்டுள்ளதால், வழிப்போக்கர்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
சர்ச்சை முற்றிய நிலையில், நகராட்சி செயலாளர் எச். அபிலாஷ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். “மது அருந்துவதை ஊக்கப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது (Recycling) மற்றும் நிலைத்தன்மை (Sustainability) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் 'மறுசுழற்சி மரம்' உருவாக்கப்பட்டது.” என அவர் தெரிவித்துள்ளார்.
குருவாயூர் நகராட்சி இதுபோன்ற கலை முயற்சிகளால் சர்ச்சையில் சிக்கவது இது முதல் முறையல்ல. கடந்த அக்டோபர் மாதம், பயோபார்க் (Biopark) பகுதியில் ஒரு மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. ஆனால், அந்தச் சிலை காந்தியின் சாயலில் இல்லாமல் மிகவும் விசித்திரமாக இருப்பதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விவகாரம் ஓய்வதற்குள் இப்போது 'பீர் பாட்டில்' மரம் விவாதப் பொருளாகியுள்ளது.