"ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும்" - அடுத்தடுத்த கிடுக்கிப்படியால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

 
Published : Feb 02, 2017, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும்" - அடுத்தடுத்த கிடுக்கிப்படியால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

சுருக்கம்

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வருமான கணக்கை கட்டாயமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வர உள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற வேண்டும். அதற்கு மேல்  காசோலையாகவோ அல்லது நன்கொடை பத்திரங்கள் மூலம் தான் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இப்போதுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை ரொக்கமாக நன்கொடை பெற்றுக் கொள்ளலாம். அதை திருத்தி ரூ. 2 ஆயிரமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சட்டப்படி, அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்க பெற விதி இருக்கிறது. ஆனால், பாதிக்கு ேமற்பட்ட கட்சிகள் வருமான வரி ரிட்டன் கணக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு தாக்கல் செய்வதில்லை. 

அரசியல் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை முன்னெடுக்க, 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சட்டத்திருத்தம் மூலம் ஒவ்வொரு கட்சியும், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக வருமானக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உதாரணமாக, 2018-19ம் ஆண்டுக்கான கணக்கை டிசம்பர் 31, 2018ம் ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாத கட்சிகள், வருமானவரி விலக்கில் இருந்து நீக்கப்படுவார்கள். அதற்கான நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கண்டிப்பான ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீத கட்சிகள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.

 வருமானவரி கணக்கை  2 முதல் 3 ஆண்டுகள் வரை தாமதமாக தாக்கல் செய்யலாம் என சட்டத்தில் இடம் இருக்கிறது. அதை இப்போது கட்சிகள்  பயன்படுத்துகின்றன. ஆனால், இனிமேல், தாமதமாக தாக்கல் செய்தால், வருமானவரி விலக்கு கோர முடியாது.

 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளோம். இதன்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கொண்டுவரும் திருத்தத்தின்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை பத்திரம் அளிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும்.

இந்த நன்கொடைப் பத்திரத்தை குறிப்பிட்ட வங்கிகளில் இருந்து காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம் தனிநபர் ஒருவர் வாங்கி அதை கட்சிகளுக்கு அளிக்க முடியும். இதன் மூலம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அளவு தெரிந்து விடும். விதிமுறையை மீறும் கட்சிகளுக்கு வருமானவரி விலக்கு ரத்து செய்யப்படும்.

 இப்போதுள்ள சட்டப்படி, தனிநபர்கள் வருமானவரி க் கணக்கை ஜூலைக்குள், நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்துக்குள், அரசியல் கட்சிகள், அறக்கட்டளைகள் டிசம்பர் மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதன் மூலம், தாமதமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு தாக்கல் செய்தால், வருமான வரிச் சலுகை ரத்து ஆகிவிடும் என்ற அழுத்தத்தின் காரணமாக சரியான நேரத்துக்குள் தாக்கல் செய்வார்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!