
ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்து, அதற்காக பீட்டா அமைப்பிடம் விருது பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதா கிருஷ்ணன் பணிக்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல், குடியரசுத் தலைவரின் செயலாளர், மத்திய சட்டத்துறை அமைச்சகம் மற்றும் பீட்டா ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் கலையரசன் உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் தன்னையும் இணைத்து பீட்டா விலங்குகள் நல அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை கடந்த 2014ம் ஆண்டு விசாரணை செய்த உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடை விதித்தது. அதில் முக்கியமானவர் நீதிபதி கே.எஸ். ராதா கிருஷ்ணன் பணிக்கர். இவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
பீட்டாவின் விருது
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்குப் போட்டிக்கு எதிராக தீர்ப்பளித்த 7 மாதங்களுக்கு பின், பீட்டா அமைப்பு சார்பில் பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதா கிருஷ்ணனுக்கு இந்த ஆண்டின் ‘சிறந்த மனிதர் விருது’ வழங்கப்பட்டது. அப்போது இவர் நீதிபதியாக இருந்து கொண்டே இந்த விருதைப் பெற்றார்.
புகைப்படம்
இது தொடர்பான புகைப்படம் பீட்டா அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பொதுநல மனு
இந்நிலையில், இந்த முன்னாள் நீதிபதியின் இந்த செயல் குறித்து விசாரிக்கப் பட வேண்டும் என்று கூறி சாலை சக்கரபாணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
நோட்டீஸ்
அந்த மனுவைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் கலையரசன் முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதா கிருஷ்ணன் குடியரசுத் தலைவரின் செயலாளர், மத்திய சட்டத்துறை அமைச்சகம் மற்றும் பீட்டா ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சார்பானது
இது குறித்து மனுதாரர் சாலை சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், “ கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு ஒரு தரப்புக்கு சார்பாக அளிக்கப்பட்டது என வெளிப்படையாகத் தெரிந்தது. அதற்கான ஆதாரங்களையும் திரட்டியுள்ளோம்.
வரலாற்றில் இல்லாதது
ஒரு வழக்குக்கு தீர்ப்பு அளிக்கப்பட்ட பின், எந்த அமைப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தோமோ அந்த அமைப்பிடம் இருந்து விருது பெறுவது நீதித்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாகும்.
நமது அரசியலமைப்புச் சட்டம் நீதித்துறை சுதந்திரமாக் செயல்படவும், சார்பற்ற நீதிவழங்கவும் அதிகாரம் அளித்துள்ளது. நீதிபதிகள் யாருக்கும் அச்சமின்றி, சார்பற்ற முறையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
களங்கம்
பீட்டா நிறுவனத்திடம் இருந்து முன்னாள் நீதிபதி ராதா கிருஷ்ணன் பணிக்கர் இந்த விருதை பெற்று இருக்ககூடாது. தீர்ப்பளித்த 7 மாதங்களுக்குள் இந்த விருதை ஏன் பெற வேண்டும். இந்த தீர்ப்புக்காக பணியில் இருக்கும் போதே பெற வேண்டிய அவசியம் என்ன? இதன்மூலம் நீதித்துறையை களங்கப்படுத்திவிட்டார்.
ஆதாரம்
பீட்டாவின் இணையதளத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததற்காக இந்த விருது தரப்பட்டுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
விதிமீறல்
இந்த சம்பவத்துக்கு பின், ராதா கிருஷ்ணன் விருதை திருப்பிக் கொடுத்தால் கூட அது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124(7)ன் படி முழுமையான சட்டவிதிமுறை மீறலாகும்'' எனத் தெரிவித்தார்.