ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுமா? - எதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படும்... முழு விவரம்

First Published Jan 31, 2017, 4:13 PM IST
Highlights


பொது பட்ஜெட்டுடன் இணைத்து இன்று தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய இருப்புபாதைகள் அமைத்தல், இரட்டை வழிப்பாதைகள் அமைத்தல், ரெயில் நிலையங்கள் சீரமைத்தல், பாதுகாப்பு மேம்பாடு ஆகிய அம்சங்கள் அதிகம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், பயணிகள் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், புதிய ரெயில்கள் குறித்து எந்த அறிவிப்பு இருக்காது எனவும் மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

92 ஆண்டுகள்

92 ஆண்டுகாலமாக ரெயில்வே துறைக்கு தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட் நீக்கப்பட்டு, முதல்முறையாக 2017-18 நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பிப்ரவரி 1-ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இன்று தாக்கலாகும் பொது பட்ஜெட்டில், ரெயில்வே துறை அதற்கான வரவு, செலவுகளையும், புதிய அறிவிப்புகளையும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார்.

முக்கியத்துவம்

ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய இருப்புபாதைகள் அமைத்தல், ரெயில்நிலையங்களை புனரமைத்தல், பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதலுக்கு அதிக முக்கியத்துவத்தை ஜெட்லி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு நிதி

அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரெயில்வே துறைக்கு தனியாக, ரூ. ஒருலட்சம் கோடி மதிப்பில், ‘பாதுகாப்பு நிதி’ ஒன்றை அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் இதில் முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ரெயில்வே துறைக்கு என தனியாக சிறப்பு பாதுகாப்பு நிதி ஒன்றை ரூ.1.19 லட்சம் கோடியில் ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில்வேஅமைச்சர் சுரேஷ் பிரபு நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.  அந்த கோரிக்கையை நிதி அமைச்சர் ஜெட்லி ஏற்றுக்கொண்டு, தனி நிதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.

மேம்பாட்டு ஆணையம்

மேலும்,  ரெயில்வே துறைக்கு தனியாக, ரெயில்வே மேம்பாட்டு ஆணையம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.  இந்த ஆணையத்துக்கான மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்ட பிற இயக்குநர்கள் குறித்தும் அறிவிக்கப்படலாம்.

கட்டணமில்லா வருவாய்

டிக்கெட் கட்டணம், சரக்கு கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர்த்து கட்டணமில்லா வருவாயை பெருக்க திட்டங்கள் அறிமுகமாகும். குறிப்பாக ரெயில்வே துறைக்கு சொந்தமான 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விடுதல், தனியார் பங்களிப்புடன்ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

ரெயில்கள் வேகம்

அனைவரும் எதிர்பார்த்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வேகம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. முதல் 200கி.மீ. வரை அதிகரிப்பது, அதற்கான கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வது குறித்தும் அறிவிக்கப்படலாம்.

ஒதுக்கீடு

ரெயில்வே துறை இந்த ஆண்டு மத்தியஅரசிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு பெறும், மேலும் தன் துறையில் இருந்து ரூ. 5 ஆயிரம் கோடிவரை வருவாயையும், பாதுகாப்பு செஸ் என்ற பெயரில் வரி விதித்து வருவாயை பெருக்கிக்கொள்ளும்.

இந்த பட்ஜெட்டில் ரெயில்பாதைகளை இரட்டிப்பாக்குதல், புதிய பாதைகளை அமைத்தல் போன்ற முதலீட்டு செலவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், புதிய வழித்தடங்களுக்கான புதிய ரெயில்கள் அறிவிப்பு இருக்காது எனத் தெரிகிறது.

click me!