
2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை தாக்கல் செய்யப்பட்டவுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல்முறையாக ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யாமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்த கூட்டத்தொடர் அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதலே ஃபிப்ரவரி கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டானது, தற்பொழுது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், ஃபிப்ரவரி முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் அரசியல் உட்பட
அனைத்து தரப்பினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று, மரபுப்படி, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இதனையடுத்து நாளை 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், இந்த பட்ஜெட்டில், வருவாயை பெருக்கும் விதமாக புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு 14.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்ட சேவை வரியை, 18 சதவிகிதம் வரை உயர்த்தவும் நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் எந்த அளவிற்கு அமையும் என்பது குறித்து பொருளாதார விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட் தனி நபரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் மையப்படுத்தி அமையும் என்றும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால், இனையதள வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.