
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வேலை நேரத்தில் பான் மசாலா, குட்கா மெல்லக்கூடாது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளிலும் பயன்படுத்துக்கூடாது என்று முதல்வர் ஆதித்ய நாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு முதல்வராக கோராக்பூர் மடாபதிபதியும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து நாள்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அயோத்தியில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சி வெட்டும் கூடங்கள், பசுக்கள் கடத்தல் ஆகியவற்றுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வராக பதவி ஏற்றபின் முதல்முறையாக தலைமைச் செயலகத்துக்கு ஆதித்யநாத் நேற்று சென்றார். அப்போது, தலைமைச் செயலகத்தின் துணை அலுவலகத்துக்குள் சென்றபோது, அங்கு சுவர்களில் எல்லாம் பான்மசலா, குட்கா மென்று துப்பிய சிவப்பு நிற கறைகள், வெற்றிலைபாக்கு கறைகள் படிந்து பார்ப்பதற்கு அலங்கோலமாகவும், சிங்கமாகவும் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் அலுவலகம், செயலாளர் தலைமைச் செயலாளர் , முதன்மைச் செயலாளர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அலுவலகத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சுவற்றிலும்இதேபோல கறைகள் இருப்பதை ஆதித்ய நாத் கண்டு முகம் சுளித்தார்.
அதன்பின் சில மணி நேரங்களில், அதிரடி உத்தரவுகளாக,“ இனி, அரசு அதிகாரிகள் யாரும், பணி நேரத்தில் பான்மசாலா, குட்கா மெல்லக்கூடாது, பள்ளி, கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் பான்மசாலா, குட்காவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது’’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இது குறித்து துணை முதல்வர் கே.பி.மவுரியா கூறுகையில், “ தலைமைச் செயலகம் அலுவலகம் முழுவதையும் முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது,சுவற்றில் வெற்றிபாக்கு மென்று தின்று துப்பிய எச்சில் கறைகள், பான்மசாலா,குட்கா மென்று துப்பிய கறைகள் இருந்ததைக் கண்டார். அதன்பின் இந்த உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
அதுமட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களை மிகவும் சுத்தமாகவும், சூழலை மிகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்த வேண்டும், அதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்’’ எனத் தெரிவித்தார்.
முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்களை மூடவும், பசுக்கடத்தலுக்கு முற்றிலுமாக தடை செய்யும் நேற்றுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.