
மரண தண்டனையை ஒழிப்பதற்கு மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது-
பயங்கரவாதம் மற்றும் நாட்டின் மீது போர் தொடுத்தல் போன்ற குற்றங்கள் தவிர்த்து மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஒழிக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் அதனுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கிரிமினல் சட்டம் மற்றும் குற்ற நடைமுறை விதிகள், அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் பொதுப்பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
இந்த பரிந்துரை குறித்து கருத்துகளை அறிந்து கொள்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது’’.
இவ்வாறு அவர் கூறினார்.