குஜராத்தில் ரூ.450 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்பரப்பில் பயணித்த படகில் இருந்து ரூ.450 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த படகில் பயணித்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (என்.சி.பி.) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
என்.சி.பி. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள், என்.சி.பி. அதிகாரிகள் இணைந்து நேற்று இரவு ரோந்து பணியின் போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். அவர்கள் வந்த படகில் இருந்து ரூ.450 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியன்று குஜராத் கடற்பரப்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அது, இந்தியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை என கூறப்பட்ட நிலையில், குஜராத் மாநில கடற்பரப்பில் மீண்டும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சனாதன தர்மம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு
தலைநகர் டெல்லி மற்றும் புனேவில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2500 கோடி மதிப்பிலான, சுமார் 1,100 கிலோகிராம் எடை கொண்ட 'மியாவ் மியாவ்' என்று அழைக்கப்படும் Mephedrone (MD) என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், குஜராத்தில் கடற்பரப்பில் கடந்த 30 நாட்களில் இரண்டு முறை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.