ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். ஆளும் பாஜக - ஜனநாயக்க ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அவரது அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அம்மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபி இரண்டு தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளது. ஆனால், மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, உடன்பாடு எட்டப்படாததால், ஹரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் களம் காணவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெகன் மோகனுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு!
இந்த நிலையில், ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக இன்று மாலை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜேஜேபிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஏழு பேர் சுயேச்சைகள். இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியானா லோகித் கட்சி (எச்எல்பி) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர்.
இதில், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியானா லோகித் கட்சி (எச்எல்பி) ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்.எல்.ஏ., 6 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜேஜேபி கட்சியை சேர்ந்த 4-5 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது உறுதியாகியுள்ளது.