டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானே காரணம்… உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு அதிரடி!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 7:43 PM IST
Highlights

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். டெல்லியில்காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவிற்கு காற்றின் தரம் தற்போது காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தன் மூலம் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி காற்று மாசுக்கு, பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் உபி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் வேளாண் அறுவடைக்கு பிறகு, டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

காற்று மாசு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று விசாரணையின் போது, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை . காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நிலை என்ன? காற்றின் தரம் குறைவதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தீர்களா? எத்தனை விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன? அரசு நடவடிக்கை எடுத்ததா? மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? அரசிடம் இருந்து எங்களுக்கு தரவுகள் எதுவும் தேவையில்லை, அதற்கு பதில் தீர்வுகள்தான் வேண்டும். பெரியவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், 3, 4 வயது குழந்தைகள் ஸ்கூலுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. காற்று மாசு அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை மட்டும் திறந்தது ஏன்? எங்களை உத்தரவுகள் பிறப்பிக்க வைக்க வேண்டாம், எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா? காற்று மாசை கட்டுப்படுத்த 24 மணி நேரத்திற்குள் அரசு உரிய திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்க 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டிருந்ததையடுத்து, டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் இன்று தாக்கல் செய்துள்ளது. இது தவிர 17 பறக்கும் படைகள் கொண்ட கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக பறக்கும் படைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, இதுகுறித்த விசாரணையில், தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது குறித்த விவாதமும் நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர் தொழிற்சாலைகளை மூடுவது சர்க்கரை ஆலைகளை பாதிக்கும். பாகிஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு கீழ்நோக்கி வரும் காற்றில் மாசு அடித்து கொண்டு வரப்படுகிறது. டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம். காற்று மாசுக்கும் உபி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

click me!