பாகிஸ்தான் அத்துமீறல் தாக்குதல் தொடர்கிறது - காஷ்மீர் எல்லை கிராமங்களில் ஒரே நாளில் 8 பேர் பலி

 
Published : Nov 02, 2016, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
பாகிஸ்தான் அத்துமீறல் தாக்குதல் தொடர்கிறது - காஷ்மீர் எல்லை கிராமங்களில் ஒரே நாளில் 8 பேர் பலி

சுருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கோடு, மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கிராமங்களில்  பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி சிறிய ரக பீரங்கி , துப்பாக்கி மூலம் சுட்டும் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலியானார்கள்.

இதற்கு இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஒரு மாத காலமாக அத்துமீறிய வகையில் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

மோர்டார் குண்டு
 
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா, ஜம்மு, பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக 120எம்.எம். மற்றும் 82 எம்.எம். மோர்ட்டார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். 

6 பேர் பலி

சம்பா மாவட்டத்தின் போலீஸ் துணை ஆணையர் சம்பா சீத்தல் நந்தா கூறுகையில், “ சம்பா மாவட்டம், ராம் கார்க் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தி தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர். மேலும், அதே பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசிய மோர்ட்டார் குண்டு சத்தத்தின் அதிர்ச்சி தாங்காமல் ஒருவர் உயிரிழந்தார். 

இதன்மூலம் சம்பா மாவட்டத்தில் 6 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்கள் ராம்கார் மருத்துவமனையிலும், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார். 

சர்வதேச எல்லைக் கோட்டு அருகே அமைந்துள்ள ராம்கார்க் பகுதியில் உள்ள ரங்கூர் மற்றும் ஜார்டா கிராமங்களில் பாகிஸ்தான் குண்டுகள் விழுந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளது. 

துப்பாக்கிசூடு

ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர் என மாவட்டபோலீஸ் ஆணையர் சபீர் அகமது பாட்தெரிவித்துள்ளார். 



அவர் கூறுகையில், “ பஞ்ச்கிரேன் எல்லையில் அமைந்துள்ள மஞ்சகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். நவுசேரா பகுதியில் ராணுவத்துக்கு சுமைகள் தூக்கிச் செல்லும் சுமை தூக்கிகள் 3 பேர் காயமடைந்தனர். மேலும், பூஞ்ச் மாவட்டம் மேந்தார்நகரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசிய மோர்ட்டார் குண்டுகளால் 3 பேர் காயமடைந்தனர்'' எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், இங்குள்ள சம்பா மாவட்டத்திலும் நேற்று காலையில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ராம்கர் அருகே நடைபெற்ற தாக்குதலில் 22 வயது மதிக்கத்தக்க ஒருபெண் பலியானார். 6 பேர் காயமடைந்தனர் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பா ஜோகிந்தர் சிங் தெரிவித்தார். 

15 பேர் காயம்

ஜம்மு மாவட்டம், பூஞ்ச் மாவட்டம் மேந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மோர்டார் குண்டுகளை வீசியதில் ரூபியா கவுசர்(28), தஸ்வீர் பி(24) ஆகிய இரு பெண்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், பின்டி கிராமத்தைச் சேர்ந்த போத்ராஜ்(44), நிக்கி, தரானா தேவி, மற்றும் சஞ்சலா தேவி(49) ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் 15 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம் பந்திபோராவின் அஜர் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

60 முறை

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியபின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 60-க்கும் மேற்பட்ட முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.



பள்ளிகளுக்கு விடுமுறை

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் சம்பவம் நேற்று தொடர்ந்ததால், ஜம்முமாவட்டத்தில் எல்லை ஓரம் இருக்கும் 172 தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீரந்தீப்சிங் தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!