
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விபூஷன், பத்ம பூஷண், மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் பொது சேவை போன்ற முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்தவர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான (2025) பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்கு கிடைத்த கௌரவம்:
இந்த முறை தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார், புகழ்பெற்ற நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், முன்னணி தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வானார்கள்.
பத்ம பூஷண் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா:
இந்த நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று (மே 27, 2025) நடைபெற்ற சிறப்பு விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஷோபனா, குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக் கொண்டார். அதேபோல், தொழிலதிபர் நல்லி குப்புசாமியும் பத்ம பூஷண் விருதை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் பல்வேறு துறைகளில் தமிழகத்தின் பங்களிப்பை இந்த விருதுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.