பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்
கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
ஆனால், தேர்தலுக்காக கட்சத்தீவு பிரச்சினையை பாஜக கையில் எடுத்துள்ளாதாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள். ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? என கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக அரைத்த மாவையேதான் தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. சாத்தியமே இல்லாத திட்டங்களை எல்லாம் கூறி மக்களை ஏமாற்றி திசை திருப்ப பாஜக முயற்சிகிறது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.
Loksabha Elections 2024 சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்!
பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும் பேராபத்து எழுந்திருப்பதாக குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை மக்களை பிளவு படுத்துவதுடன் நாட்டினை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்லும் எனவும் கூறினார்.
நாட்டை உடைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பாஜக ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டுவதை சுட்டிக் காட்டிய பசிதம்பரம், ஜம்மு -காஷ்மீரை 3ஆக உடைத்தது யார்? என கேள்வி எழுப்பினார். இந்தியாவை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டு செயல்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.