விவிபேட் இயந்திரம் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரும் வழக்குகளை உச்ச நீதிமன்றன் இன்று விசாரிக்கவுள்ளது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனை எளிதாக ஹேக் செய்யலாம் என நிபுணர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், அவை ஹேக் செய்ய முடியாதவை என மத்திய பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் தொடர்ந்து கூறி வருகிறது.
பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்கு செலுத்தும் அலகு (Ballot Unit), கட்டுப்பாட்டு அலகு (Control Unit), மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை தாள் (VVPAT) என மூன்று அலகுகள் உள்ளன.
இதில், வாக்காளர் தனது வாக்கை யாருக்கு செலுத்தினார் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் - VVPAT (Voter Verified Paper Audit Trail) இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை அழுத்தி வாக்களர் ஒருவர் தனது வாக்கை செலுத்தியதும், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். இதன் மூலம், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள முடியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறையின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது என்றும், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும், வாக்களிக்கும் வாக்காளர்களின் ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து, தனியே ஒரு பெட்டியில் போட வேண்டும். அதன்பின், இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கை, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கையை ஒப்பிட்டு தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்யும்: புவி அறிவியல் அமைச்சகம்!
இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.