தும்பை விட்டு வாலை புடிக்கிற கதையா ஆயிடக்கூடாது.. கொரோனா விவகாரத்தில் ப.சிதம்பரம் எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Mar 20, 2020, 3:18 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் நிலையில், பிரதமர் மோடி சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் பின்நாளில் வருத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்து, சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்புகளும் சீனாவைவிட இத்தாலியில் அதிகமாக உள்ளது. உலகத்தையே கொரோனா மிரட்டிவருகிறது. எனவே உலகம் முழுதும் கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. 

இந்தியாவிலும் கொரோனாவின் தீவிரமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்களை வலியுறுத்திய பிரதமர் மோடி, அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வரும் 22ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சுய ஊரடங்கை மக்கள் தங்களுக்காக அமல்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் யாரும் அன்றைய தினம் வெளியே வர வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். 

இந்தியாவில் தினந்தோறும் 25-30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

இந்நிலையில், பிரதமர் மோடி மக்களிடம் ஆற்றிய உரையை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட மேற்கண்ட விவரத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு முன்பாக, டுவீட் செய்திருந்த ப.சிதம்பரம், மோடி தனது உரையில், இந்தியாவில் அனைத்து தொழில்துறை சார்ந்த விஷயங்களையும் மூடுமாறு உத்தரவிடவில்லையென்றால், நான் அதிருப்தியடைவேன் என்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் உரைக்கு பிறகு பதிவிட்ட டுவீட்டில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வரவேற்கிறேன். 

பிரதமர் மோடிக்கும் அவரது பேச்சுக்கும் ஆதரவளிக்க வேண்டியது எனது கடமை. கொரோனா வைரஸுக்கு எதிராக போர் தொடுக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. அடுத்த சில தினங்களில் சமூக, பொருளாதாரம் சார்ந்த அதிரடியான முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார் என நினைக்கிறேன்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் அறிக்கையின் படி, கொரோனா அச்சுறுத்தலில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் தான் இருக்கிறது. கொரோனாவை தடுக்க இதுவே சரியான தருணம். கொரோனாவை அடுத்த கட்டத்திற்கு பரவவிடக்கூடாது. அதற்கு அதிரடியான சில முடிவுகளை எடுத்தே தீர வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தில் வருந்தக்கூடிய சூழல் உருவாகும் என்று ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
 

click me!