சர்வதேசத்தையே அச்சுறுத்தும் கொரோனா.. கூகுளின் அதிரடி முன்னெடுப்பு

By karthikeyan VFirst Published Mar 20, 2020, 2:18 PM IST
Highlights

கொரோனா உலகம் முழுதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.
 

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்து, சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்புகளும் சீனாவைவிட இத்தாலியில் அதிகமாக உள்ளது. உலகத்தையே கொரோனா மிரட்டிவருகிறது. எனவே உலகம் முழுதும் கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. 

இந்தியாவிலும் கொரோனாவின் தீவிரமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்தியாவில் தினந்தோறும் 25-30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

எனவே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். கைகளை கண்களிலோ மூக்கிலோ அல்லது காதுகளிலோ வைக்க வேண்டாம். பொதுவெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் அனைத்து தரப்பாலும் வழங்கப்பட்டுவருகின்றன. 

கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையாக இருந்து, சரியான வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் பின்பற்றி, அதை விரட்ட வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச சமூகம் உள்ளது. 

இந்நிலையில், கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று 6 வழிமுறைகளை விளக்கும் விதமாக கூகுள், டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த இண்டர்நெட் உலகில் அனைவருமே இணையதளத்தை பயன்படுத்துவதால், எதுவாக இருந்தாலும் கூகுளில் தான் தேட வேண்டும். அப்படியிருக்கையில், கூகுள் டூடுலில் வீடியோ வெளியிட்டிருப்பதால், அதை அனைவரும் பார்க்கக்கூடும். அந்த வீடியோ இதோ..
 

click me!