
நாடு மதரீதியாக விஷயங்களால் நாடு பிளவுபட்டுவிட்டது, எங்களின் கத்தோலிக்க சமூகம், மத்திய அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது என்று இந்திய கத்தோலிக்க மாநாட்டின் தலைவர் கார்டினல் பேசிலியோஸ் கிளிமிஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
கத்தோலிக்க சமூகத்தின் மிக உயர்ந்த அமைப்பாக இந்திய கத்தோலிக்க மாநாடு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம், சாட்னா நகர கிராமத்தில்,கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 30-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பாதிரியார்கள் பாடல்களைப் பாட்டி தெருக்களில் வலம் வந்தனர். அப்போது, இந்து அமைப்பைச் சேர்ந்த பஜ்ரங் தள அமைப்பினர், அந்த பாதிரியாரகள் மீது தாக்குதல், நடத்தி, மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து வருகிறார்கள் என்று போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து, மிகக் கடுமையான மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பாதிரியார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக இந்திய கத்தோலிக்க மாநாட்டின் தலைவர் கார்டினல் பேசிலியோஸ் கிளிமிஸ் உள்ளிட்ட சிலர் கடந்த புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக முறையிட்டனர். அப்போது பாதிரியார்கள் கைது செய்யப்பட்டது குறித்து தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும், நீதி நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். அப்போது கேரள எம்.பி.யும் அமைச்சருமான அல்போன்ஸ் கன்னம்தானம், மாநிலங்கள் அவை துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இந்திய கத்தோலிக்க மாநாட்டின் தலைவர் கார்டினல் பேசிலியோஸ் கிளிமிஸ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
மதரீதியான காரணங்களால் நாடு பிளவு பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள எங்கள் கத்தோலிக்க சமூத்தினர், மத்திய அரசு மீதான நம்பிக்கையை இழந்து வருகிறது.
எங்களின் கிறிஸ்துவ சமூகத்தின் பார்வையில், மத்தியப் பிரதேசம் சாட்னா நகரில் பாதிரியார்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், பாதிரியார்கள் மீது மத்தியப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்து இருப்பது, குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, ஏழைமக்களை கைது செய்து இருப்பது, இவை அனைத்தும் பார்க்கும் போது, எங்களுக்கு இந்த மத்தியஅரசு உதவ முன்வரவில்லை. அந்த அரசின் மீதான நம்பிக்கையையும் இழந்து வருகிறோம்.
இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கலாம் என்பதை ஏற்கிறோம். ஆனால், மாநில, மத்திய அரசுகளின் வலிமையையும், நிலைப்பாட்டையும் எவ்வாறு மதிப்பிடுவது?.
நாடு மதரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் பிளவுபட்டு வருகிறது. ஜனநாயக நாட்டுக்கு இது மோசமானதாகும். என்னுடைய இந்திய நாடு ஒற்றுமையுடன், பன்முகத்தன்மையோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போது, மதரீதியாக பிளவுப்படத் தொடங்கிவிட்டது. இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
பாதிரியார்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளித்தார். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்தார்.
சாட்னா நகரில் எங்களின் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது. தாக்குதல் குறித்த எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இது திட்டமிட்ட தாக்குதலாக பார்க்கிறோம். மதமாற்றம் செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது.
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை. இதுபோன்ற வாதம் அபத்தமானது, ஆதாரமில்லாதது. தேர்தலுக்கும், சாட்னா நகரில் நடந்த தாக்குதலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ராஜஸ்தானில் கூட இதுபோன்ற தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து கிறிஸ்துவ சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் குடுமக்களின் நலனைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் தோற்றத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் நபர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும். நாம் அனைவரையும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், வேற்றுமையில்தான் ஒற்றுமை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.