
ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும் என்றும் விளையாட்டை விரும்பும் நாடாக இருக்கும் இந்தியாவை 'விளையாடும்' நாடாக மாற்ற வேண்டும் எனவும் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்–சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012–ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும் இதுவரை விவாதங்களில் எதுவும் பங்கேற்கவில்லை.
முதன்முதலில் நேற்று பேச முன்வந்த சச்சினுக்கு காங்கிரஸ் கட்சியினர் இடம் கொடுக்கவில்லை. அப்போது, மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்குமாறு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டதால், டெண்டுல்கரால் உரையாற்ற முடியவில்லை.
இதனால், டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வடகிழக்கு இந்தியாவில் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் ஆரோக்கியமான மற்றும் உறுதியான இந்தியாவை உருவாக்குவதே தனது கனவு எனவும் தெரிவித்தார்.
வறுமை, சுகாதாரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் விளையாட்டை ஒரு பாடமாக்க வேண்டும் எனவும் விளையாட்டை விரும்பும் நாடாக இருக்கும் இந்தியாவை 'விளையாடும்' நாடாக மாற்ற வேண்டும் எனவும் கூறி உள்ளார்.