
பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமற்றது என மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஜம்மு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "புகைப்பட அமர்வு" என்று விமர்சித்தார். மேலும் அவர்களின் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் அடுத்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டம் குறித்து அமித் ஷா கூறுகையில், “பாட்னாவில் போட்டோ செஷன் நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மோடிக்கு 2024ஆம் ஆண்டு தேர்தலில் சவால் விடுவோம் என்கின்றனர். இந்த எதிர்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அது உண்மையாக இருந்தால் தயவுசெய்து மக்கள் முன் வாருங்கள். 2024 இல் 300 க்கும் மேற்பட்ட இடங்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்; மோடி மீண்டும் பிரதமராவார்.” என்றார்.
தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். பாட்னாவில் கூடியிருக்கும் அரசியல் தலைவர்களின் சாதனை என்ன? என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், “இன்று, அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அவ்வளவு முக்கியமல்ல, மாறாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இன்று நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸும் பாஜகவும்தான் காரணம். பாஜக அல்லது காங்கிரஸைக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.” என்று தெலங்கானா அமைச்சரும், பாரத் ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவருமான கே.டி.ஆர். சாடியுள்ளார்.
“எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது பொய், புகைப்படங்களுக்காக மட்டுமே அவர்கள் கூடியுள்ளனர். லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் காங்கிரஸால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடினார்கள்; ஆனால் இப்போது அவர்களுடன் கைகோர்த்து வருகிறார்கள்.” என்று ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் தெரிவித்துள்ளார்.
மத்தியில் தொடர்ந்து இரண்டு முறை அரியணையை பிடித்துள்ள பாஜக, மூன்றாவது முறையாக 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியை இணைத்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தொடர்வது கஷ்டம்: ஆம் ஆத்மி!
அந்த வகையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்க அணி - UBT), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி என நாட்டின் முக்கிய 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதில், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக தெரிகிறது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டிலேயே உள்ளது. பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் கால் பதிக்க திட்டமிட்டே தனது கட்சியை அகில இந்திய கட்சியாக மாற்றினார். ஆனால், எதிர்க்கட்சிகள் இணைப்பை முன்னெடுத்த அவரது முயற்சி தோல்வியடைந்தது, பிரதமராகும் கனவு உள்ளிட்டவைகளால் அவர் இந்த கூட்டணியில் இணைவாரா என்பது கேள்வியாக உள்ளது. இருப்பினும், இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட ஒப்புக் கொண்டதாகவும், அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு காரணமாக எதிர்காலத்தில் கூட்டணியில் தொடர்வது கடினம் என தெரிவித்துள்ளது.
ஆனால், இவர்கள் அனைவரையும்; அதாவது காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கி ஒரு குடையின் கீழ் இணைத்தால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், சில எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவை சாத்தியமானால், பாஜகவை கட்டாயம் வீழ்த்த முடியும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.