
பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஈடுபட்டிருந்தார். தற்போது அந்த முயற்சியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஜார்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்க அணி - UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து எப்படி செல்வது, திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கான சித்தாந்தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்.” என்றார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசின் தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு: ஹேப்பி நியூஸ்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், அடுத்த ஆண்டு தேர்தலின் போது பாஜகவை எதிர்த்துப் போராட ஒப்புக்கொண்ட பொது முன்னணியின் தலைவர்கள் அடுத்த மாதம் சிம்லாவில் மீண்டும் கூடுவார்கள் என்றார். அப்போது, வழிமுறைகளை இறுதி செய்யப்படும் எனவும், அந்தந்த மாநிலங்களில் எப்படி ஒன்றாக இணைந்து பணிபுரிவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் சந்திக்கவுள்ளோம் என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
பாட்னாவில் இருந்து கூட்டத்தை தொடங்குங்கள், அது பொது இயக்கமாக மாறும் என்று நிதிஷ்குமாரிடம் கூறியதாக தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடைசியாக டெல்லியில் நடந்த கூட்டம் பலனளிக்கவில்லை. ஆனால், தற்போதைய சந்திப்பு நன்றாக இருந்தது என்றார். மேலும், நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்; பாஜகவின் அனைத்து அரசியல் பழிவாங்கல்களுக்கும் எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்; அடுத்த சந்திப்பு காங்கிரஸ் தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
எங்களிடம் வெவ்வேறு சித்தாந்தங்கள் உள்ளன, ஆனால் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இது அதிகாரத்திற்கான வேட்கை அல்ல, சித்தாந்தத்துக்கான போர் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
நமது அரசியலமைப்பு, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் தாக்கப்படும் விதம் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது. தற்போது அது நாடு முழுவதும் நடக்கிறது என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில் ‘பாட்னாவில் தொடங்கப்பட்ட ஜே.பி இயக்கத்தைப் போலவே, நமது ஐக்கிய முன்னணிக்கும் மக்களின் ஆசி கிடைக்கும்.’ என்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் நான் பேசுகிறேன். நான் இப்போது ஃபிட்டாக இருக்கிறேன்; பாஜகவை ஃபிட்டாக மாற்றுவேன் என ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
“இது சித்தாந்தங்களின் போர். உண்மையில், எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கும், ஆனால் நாங்கள் ஒன்றாகச் செயல்படவும், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் சித்தாந்தங்களைப் பாதுகாக்கவும் முடிவு செய்துள்ளோம்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.