கிலோ 100 ரூபாயைத் தொடப் போகும் வெங்காய விலை !! ஹோட்டல்களில் தயிர் வெங்காயத்துக்குப் பதில் தயிர் வெள்ளரிக்காய் !!

By Selvanayagam PFirst Published Sep 23, 2019, 8:20 AM IST
Highlights

வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது ஏழை எளிய மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை அடுத்த இரண்டு நாட்களில் 100 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக  இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. 

இதனால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் கிடுகிடுவென மேல் உயர்ந்து வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநிலம் லசல்கோன் சந்தையில், கடந்த வார நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45  ரூபாயாக உயர்ந்தது.


கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை சென்னையில் 38 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 48 ரூபாயாகவும் மும்பையில் 56 ரூபாயாகாவும் டெல்லியில் 57 ரூபாயாகவும் இருந்தது.

ஆனால், இந்த வார நிலவரப்படி சராசரியாக 70 முதல் 80 ரூபாய் என்னும் அளவுக்கு வெங்காயத்தின் விலை அனைத்து இடங்களிலும் ஏற்றம் கண்டுள்ளது.

நாட்டின் தற்போதைய வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு தொடரும் எனவும் இதனால்  வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேநிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை கடந்து விடக்கூடும் எனத் தெரிகிறது.

தற்போது பெரும்பான்மையான ஹோட்டல்களில் பிரியாணிக்கு தயிர் வெங்காயத்துக்குப் பதிலாக தயிர் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

click me!