
நாடுமுழுவதும சரக்கு மற்றும் சேவை வரி( ஜி.எஸ்.டி.) அடுத்த ஆண்டு ஏப்ரல் நடைமுறைக்கு வரும் போது செல்போன் பயன்படுத்துவர்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும் எனத் தெரிகிறது.
நாடுமுழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடைவடிக்கை எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப்பெற்றுவிட்ட நிலையில், வரிவீதங்கள் குறித்தும் முடிவு செய்யப்பட்டு, மாநிலங்களுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டது.
இதில் 4 வகையான வரிகள் விதிக்க மாநிலங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 28 சதவீதம் என வரிகள் விதிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 15 சதவீதம் வரி செலுத்தி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 4 வகையான வரிமுறைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகள் 18சதவீத படிநிலைக்குள் வருகிறது.
அதாவது, தற்போது விதிக்கப்பட்டுவரும் 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி, அதை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும். அதனால், தற்போது, மாதத்துக்கு 500 ரூபாய் ரீசாரஜ் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர் கூடுதலாக ரூ.150 செலவு செய்ய வேண்டியது வரும்.
ஆனால், செல்போன் சேவை என்பது தற்போது அத்தியாவசிய சேவையாக மாறிவிட்டதால், அதை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. மேலும், வரியை குறைக்கவும் கோரியுள்ளன.
செல்போன் சேவைக்கு 18சதவீதம் வரி விதிக்கப்படும் போது, இப்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைப்பதும் கடினமாகும், புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதும் குதிரைக்கொம்பாக மாறும் என்பதால், 18 சதவீத வரிக்குள் செல்போன் சேவையை கொண்டு வரக்கூடாது என இந்திய செல்போன் செயல்பாட்டாளர்கள் அமைப்பின் தலைவர் மாத்யூஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவேளை மத்திய அரசு செல்போன் சேவையை 18 சதவீத வரி படிநிலைக்கு கொண்டு வரும் பட்சத்தில் செல்போன் பயன்படுத்துவோர் செல்போன் பில்லுக்கு மாதம் 3 சதவீதம் அதிகமாகவும், கால்கட்டணமும் அதிகமாகவும் செலுத்த வேண்டியது வரும்.