
மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை தமிழக கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் அனுமதி வழங்கரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணப்பரிமாற்றம் செய்யவும் ரிசர்வ் வங்கி தடை செய்து உத்தரவிட்டது.
இதனால், கூட்டுறவு வங்கிகளை நம்பியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பணிகள் முடங்கியும், அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவைக் கண்டித்து பல மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த என்.கே. குமார் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவால், செஞ்சி முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய்களை பரிமாற்றத்துக்கு அனுமதிக்கவும், லாக்கர் வசதிகளை செயல்படுத்தக் அனுமதிக்க கோரிரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் தனது சேமிப்பை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார், ஆதலால் இது மிகவும் அவசரமான மனுஆகும் என்று நீதிபதி குழு தெரிவித்துள்ளது.