மோடியை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கூட்டணி ‘வினோத போராட்டம்’

 
Published : Nov 24, 2016, 05:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
மோடியை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கூட்டணி ‘வினோத போராட்டம்’

சுருக்கம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை உத்தரவைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள் பணப் பரிமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்த உத்தரவைக் கண்டித்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 24 மணி நேரம் ‘பகலிரவு போராட்டத்தை நேற்று தொடங்கியது.

கூட்டுறவு வங்கி

ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடை செய்து கடந்த 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து கருப்பு பண புழக்கத்தைத் தடுக்கும் வகையில், நாடுமுழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யவும்,  ரூபாய் நோட்டுகளை மாற்றவும் ரிசர்வ் வங்கி தடை செய்தது.

சிரமம்

இந்த உத்தரவால் நாட்டில் உள்ள கூட்டுறவுத்துறையே முடங்கியுள்ளது. அங்கு பணியாற்றும் பணியாளர்கள், கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்து பணம் எடுக்க முடியாமல் விவசாயிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எதிர்ப்பு

இந்நிலையில், இதைக் கண்டித்து கேரளாவில் ஏற்கனவே பல போராட்டங்கள் நடந்துள்ளன. கடந்த 18-ந்தேதி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ரிசர்வ் வங்கி முன் தர்ணா போராட்டம் நடத்தினார். கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விலக்கப்பட வேண்டும் என்று 22-ந்தேதி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பகலிரவு

இந்நிலையில்,  ‘பகலிரவு போராட்டத்தை  ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி நேற்று தொடங்கியது.

இடது ஜனநாயக முன்னணி அமைப்பின் தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் தர்ணா உள்ளிட்ட பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை இடதுசாரி முன்னணி அமைப்பின் நிறுவனர் வைக்கம் விஸ்வம் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்திய அரசின் உத்தரவில் இருந்து கூட்டுறவு வங்கிகளையும், சாமானிய மக்களையும் பாதுகாக்கவும்  இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

கூட்டுறவு வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதால், மக்கள் செலவுக்கு கடும் சிரமப்படுகிறார்கள். ரூ.1000, ரூ500 நோட்டுகளுக்கு தடைவிதித்ததால், சாமானிய மக்களும், விவசாயிகளும் சொல்லமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கூட்டுறவு வங்கியில் சேமித்த பணத்தைக் கூட விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. திருமணத்துக்கு தேவையான பணத்தை வங்கியில் இருந்து பெறமுடியாமல் தவிக்கிறார்கள்'' என்று தெரிவித்தார்.

மறுப்பு

முன்னதாக,  பிரதமர் மோடியைச் சந்தித்து கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகுறித்து பேச கேரள மாநில அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்றனர். ஆனால், அவர்களைச் சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாநிலத்தையே அவமதிக்கும் செயல் என்று முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!