
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை உத்தரவு குறுகிய காலத்துக்கு நாட்டின் பொருளாாதர வளர்ச்சியை பாதிக்கும், அதே சமயம், நீண்ட காலத்தில் அரசுக்கு வருவாயை அதிகப்படுத்தி, நிதிச் சூழ்நிலையை வலிமைப்படுத்தும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து கடந்த 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் பணம் எடுக்க வங்கிகள், தபால்நிலையங்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச முதலீட்டு சேவை நிறுவனமான மூடிஸ் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் மேலாளர் மரியே டிரோன் கூறுகையில், “ பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு குறுகிய காலத்துக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதித்து, அழுத்தத்தை கொடுக்கும். மக்களின் நுகர்வு நடவடிக்கையை தீவிரமாக பாதிக்கும். வீடுகள், சிறு வணிகர்கள், சிறு தொழில்களில் உள்ளவர்கள் பணப்பற்றாக்குறையால் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
கார்பரேட் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை பாதிக்கப்பட்டு, விற்பனையும், அதனால் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும். இது நேரடியாக சில்லரை வர்த்தகத்திலும் எதிரொலிக்கும். அதேசமயம், அறிவிப்பால், தனிநபர்கள், கார்பரேட்கள் முறைகேடாக சேர்த்துள்ள சொத்துக்களை இழப்பார்கள்.
ஆனால், நீண்ட காலத்தில் வரி வருவாயை பெருக்கிக் கொடுத்து, அரசுக்கு வருவாயை கொண்டு சேர்க்கும். மேலும், அரசுக்கு முதலீட்டுச் செலவும், நிதிச் சூழலையும் வலிமையாக்கும்'' எனத் தெரிவித்தார்.
இதேபோல எஸ்.அன்ட் பி எனும் சர்வதேச கடன் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் , பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கை நீண்ட காலத்தில் மட்டுமே பலன்களை அளிக்கும். அதேசமயம், குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பையும், வங்கியின் சொத்து அளவையும் பாதிக்கும். வங்கிகளுக்கு டெபாசிட்டுகள் வரத்து அதிகரித்த போதிலும், அது நிரந்தரமான டெபாசிட்களாக தொடர்ந்து இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.