
தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ், ஒரு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகையில் குடியேறியுள்ளார். 50 கோடி ரூபாய் செலவில் அரண்மனை போன்ற வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, பார்ப்போரை பிரம்மிக்க வைக்கிறது.
ஆந்திரபிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் தொடங்கப்பட்டது. இந்த மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் திரு. சந்திரசேகரராவ் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இவர் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் திரு. சந்திரசேகரராவ் புதிய வீடு ஒன்றை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், மிகப் பிரம்மாண்டமாக பங்களா ஒன்று உருவாக்கப்பட்டு வந்தது. சுமார் 50 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடம்பர மாளிகை, அரண்மனை போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
3 பிளாக்குகளுடன் கூடிய இந்த மாளிகையில், ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கமும், முதலமைச்சர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை போன்ற புதிய மாளிகையில் திரு. சந்திரசேகரராவ், இன்று காலை குடும்பத்தினருடன் குடியேறினார்.