
வங்கியில் சேமித்து வைத்த பணத்தில் இருந்து திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் எடுக்க கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகள் வங்கிகளுக்கு கிடைத்த போதிலும், திருமண வீட்டாருக்கு பணம் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது
ரூ.500, ரூ1000 நோட்டுகளுக்கு பிரதமர் மோடி தடை விதித்ததைத் தொடர்ந்து, மக்கள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் தங்களின் சேமிப்புகளை எடுக்க வரிசையில் காத்திருக்கிறார்கள். பணம் எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்து ரிசர்வ் வங்கி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ள குடும்பத்தினர் தங்களின் செலவுக்காக ரூ.2.50 லட்சம் வங்கிச் சேமிப்பில் இருந்து எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. அதற்கான விதிமுறைகளையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அந்த விதிமுறைகளின் நகலும், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையும் வங்கிகளுக்கு கிடைத்த போதிலும் பயணாளிகளுக்கு பணம் கொடுக்க வங்கிகள் மறுப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம், கேந்திராபாரா நகரைச் சேர்ந்த பகிர் சரண் பிராம்நிக் என்பவர் தனது மகனுக்கு நாளை(26-ந்தேதி) திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், இன்னும் வங்கியில் இருந்து அவரால் பணம் எடுக்க முடியவில்லை.
அது குறித்து அவர் கூறுகையில், “ என்னுடைய பொறுமையை வங்கிகள் சோதிக்கின்றன. நாள்தோறும் வங்கி அதிகாரிகள் என்னிடம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பணம் தர மறுக்கிறார்கள். இப்படியே நாளை வரை சூழல் நீடித்தால் எனது மகனின் திருமணத்தை நிறுத்தி, தள்ளிப்போட வேண்டியதுதான். என் சூழ்நிலையைப் போலத்தான், மணப்பெண் வீட்டாரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருமணத்துக்கு எனது சேமிப்பில் இருந்து பணம் எடுக்க, திருமணப் பத்திரிகை, அத்தாட்சி சான்றிதழ், மணமகன், மணப்பெண் சான்றிதழ் அடையாள அட்டை, புகைப்படம், யாருக்கு முன்பணமாக கொடுக்கப் போகிறேன், கொடுத்துள்ளேன் என்ற பட்டியல் என்ற பட்டியலையும் ஒப்படைக்க வேண்டுமாம். இது அர்த்தமற்ற விதிமுறையாக இருக்கிறது. விதிமுறைகளை தளர்த்திய போதிலும், வங்கிக்கு நடையாக நடந்து வருகிறேன், ஆனால், பணம் கிடைக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
இது குறித்து கேந்திரபாரா, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் மேலாளர் பர்தா மஜூம்தார் கூறுகையில், “ பணப்பற்றாக்குறை தீராதவரை திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் கொடுப்பது சாத்தியமாகாது. நாள்தோறும் ரூ.10 லட்சம் எடுத்து வருகிறோம். அது, 3 மணி நேரத்தில் மக்களுக்கு பிரித்துக்கொடுத்து விடுகிறோம். அதிலும் ஏராளமானோர் பணம் இல்லாமல் வீட்டுக்கு திரும்புகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் எடுத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து திருமணம் நடத்தும் குடும்பத்தினர், வங்கிக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், பணம்தான் இன்னும் கிடைத்தபாடில்லை.