ரூ.17 லட்சம் இழப்பீட்டை பெற உயிருடன் இருக்கும் கணவரை இறந்துவிட்டதாக பெண் ஒருவர் அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளானது. பஹானகா பஜார் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி தடம் புரண்டது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோரமண்டல் ரயில் தடம் புரண்ட சில பெட்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த ரயில்வே விபத்தில் 1100 பேர் காயமடைந்தனர், 288 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்திடமிருந்து ரூ.10 லட்சமும், பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து ரூ.2 லட்சமும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அலுவலகத்தில் இருந்து ரூ.5 லட்சமும் சேர்த்து ரூ.17 லட்சமும் அடுத்த குடும்பத்தாருக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த வாரம் ஒடிசாவில் நடந்த இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.17 லட்சத்தை இழப்பீடாக கிடைக்கும் என்பதால் அந்த பணத்தை பெற அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் கணவர் விஜய் தத் அவர் மீது மணியபந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. கணவரின் புகார் அளித்துள்ள நிலையில், அந்த பெண் தற்போது தலைமறைவாக உள்ளதால், அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர். அந்த பெண் தனது கணவர் என்று கூறி தவறான சடலத்தையும் அடையாளம் காட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து வழக்கை சிபிஐ விசாரிப்பது 1`இது மூன்றாவது முறையாகும். 2010 ஆம் ஆண்டில், ஞானேஸ்வரி விபத்து குறித்து சிபிஐ விசாரணை செய்தது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு கான்பூர் ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரணை செய்தது.
288 உடல்களில், 205 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 83 பேர் எய்ம்ஸ்-புவனேஸ்வர் மற்றும் பிற மருத்துவமனைகளில் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா தெரிவித்துள்ளார்.
சிறப்பு குற்றப்பிரிவு இணை இயக்குனர் விப்லவ் குமார் சவுத்ரி தலைமையிலான 6 சிபிஐ அதிகாரிகள் குழு, மெயின் லைன் மற்றும் லூப் லைனை ஆய்வு செய்துள்ளது. ரயில்கள் இருப்பதைக் கண்டறியும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த கோர விபத்தின் பின்னணியில் "நாசவேலை இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.