ரயில்வேயில் டச்-அப் வேலை மட்டும்தான் நடக்கிறது! பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

By SG Balan  |  First Published Jun 5, 2023, 2:54 PM IST

ரயில்வேயில் அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, விளம்பரம் தேடிக்கொள்ள டச் அப் வேலை மட்டுமே செய்யப்படுகிறது என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.


ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அனைத்து வெற்று கூற்றுகளும் இப்போது அம்பலமாகிவிட்டன என்றும் உண்மையான காரணங்களை அரசாங்கம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு கார்கே எழுதிய கடிதத்தில், ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ள ரயில்வே அமைச்சரை விமர்சித்துள்ளார். சட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். "பொறுப்பில் உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விபத்தில் பிரச்சனைகள் இருப்பதையே ஒப்புக்கொள்ள விரும்பவில்லை" என்றும் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

"ரயில்வே அமைச்சர் ஏற்கெனவே விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இன்னும் சிபிஐ விசாரிக்கக் கோரியுள்ளார். சிபிஐ என்பது குற்றங்களை விசாரிக்கும், ரயில்வே விபத்துகளை அல்ல. சிபிஐ அல்லது வேறு எந்த சட்ட அமலாக்க நிறுவனமும் கவனக்குறைவால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய முடியாது" என்று கார்கே தனது கடிதத்தில் வாதிட்டிருக்கிறார்.

எங்கள் கொள்கை காந்தியின் அகிம்சை... பாஜகவின் கொள்கை கோட்சேவின் வன்முறை: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

மேலும், ரயில்வே பாதுகாப்பு, சிக்னலிங் மற்றும் பராமரிப்பு நடைமுறைகளில் சிபிஐக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை என்றார். ரயில்வேயின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த சீரழிவு குறித்து சாதாரண பயணிகளிடையே கவலை அதிகரித்துள்ளது எனவும் மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பயங்கர விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும் என்று கூறியுள்ள கார்கே, சிஏஜியின் சமீபத்திய அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 2017-18 முதல் 2020-21 வரையான காலத்தில் நடந்த 10 ரயில் விபத்துகளில் ஏழு விபத்துகள் ரயில் தடம் புரண்டதன் காரணமாக நிகழ்ந்திருக்கிறது என எடுத்துக் கூறியிருக்கிறார்.

மேலும், "2017 முதல் 2021 வரை கிழக்கு கடற்கரை ரயில்வேயில் பாதுகாப்பிற்காக ரயில்கள் மற்றும் வழித்தடங்களைப் பரிசோதனை செய்யும் பணிகள் நடக்கவே இல்லை. ஏன் இவை புறக்கணிக்கப்பட்டன?" என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் பாலசோரில் நடந்த பேரழிவு இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று எனவும் இந்த விபத்து தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் கார்கே கூறியுள்ளார்.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சுமார் 2,500 பயணிகளை ஏற்றிச் சென்ற பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகியவை மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியானார்கள். 1,100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

"இந்த துயரமான நேரத்தில் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. இருப்பினும் பல விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பு ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. இந்த உயிர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இழப்பீட்டுத் தொகை வழங்குவதும் இரங்கல் வார்த்தைகளும் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது" என்றும் கார்கேயின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளபோதும், இந்திய ரயில்வே இன்னும் ஒவ்வொரு சாமானியர்களின் உயிர்நாடியாக உள்ளது. அது மிகவும் நம்பகமானது மட்டுமல்ல, மிகவும் சிக்கனமான போக்குவரத்து முறையும் ஆகும். மேலும் ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகைக்கு சமமான எண்ணக்கையில் பயணிகள் இந்திய ரயில்களை பயன்படுத்துகின்றனர்" என்று கார்கே குறிப்பிட்டிருக்கிறார்.

"ஆனால், நான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். ரயில்வேயில் அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, விளம்பரம் தேடிக்கொள்வதற்காக டச் அப் மட்டுமே செய்யப்படுகிறது. ரயில்வேயை பயனுள்ளதாகவும், மேம்பட்டதாகவும், திறமையாகவும் மாற்றுவதற்குப் பதிலாக, அரசு மாற்றாந்தாய் மனப்பாான்மையுடன் நடந்துகொள்கிறது" என்றும் கார்கே கூறியுள்ளார்.

ரயில் விபத்து பலி எண்ணிக்கையைக் குறைத்துக் கூற முயலவில்லை: ஒடிசா மாநில அரசு விளக்கம்

click me!