Odisha : ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகளை கொன்ற வழக்கில், 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தனர்.
ஆக்ராவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபிசூர்யா நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள அதீகான் கிராமத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஒரு வீட்டில் வசித்து வந்த இளம் பெண் மற்றும் அவரது 2 வயது மகள் பாம்பு கடி ஏற்பட்டு இறந்துகிடந்துள்ளனர்.
இந்த வழக்கு சுமார் 1 மாத காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கே. கணேஷ் பத்ரா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், அவரது மனைவியோடு ஏற்பட்ட மன கசப்பில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த தம்பதிக்கு கடந்த 2020ல் திருமணம் நடந்துள்ளது, மற்றும் டெபாஸ்மிதா என்ற இரண்டு வயது மகளும் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர் பாம்புகளை வைத்து மந்திரிப்பவரிடமிருந்து ஒரு பாம்பை வாங்கியதாகக் கூறப்படுகிறது. தனது வீட்டில் நடைபெற உள்ள ஒரு சடங்கிற்கு அந்த பாம்பு தேவைப்படுவதாக கூறி அந்த நபரிடம் பாம்பை வாங்கியுள்ளார் அவர் என்று போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி பிளாஸ்டிக் ஜாடியில் அந்த நாகப்பாம்பை கொண்டு வந்து மனைவியும், மகளும் படுத்திருந்த அறைக்குள் அந்த பாம்பை விட்டுள்ளார் அந்த நபர். மறுநாள் காலை தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் பாம்பு கடித்து இறந்து கிடந்தனர். முதலில் பாம்பு தீண்டியதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் இறந்த அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்த துவங்கினர் என்று கஞ்சம் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனா தெரிவித்தார். "சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் கைது செய்யப்படுவதில் தாமதமானது.
விசாரணையின் போது, அவர் முதலில் குற்றச்சாட்டை மறுத்தார், பின்னர் பாம்பு தானே அறைக்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறினார், ஆனால் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த விஷயத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தெரிவித்தார்.